Saturday, November 3, 2007

சைவ சமயம் - வினாவிடை

கடவுள் இயல்

உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

இறைவன்.

இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?

சிவபெருமான்.

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

சிவபெருமான் எப்படிப் பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; பிறர்க்கு ஆட்படாதவர்.

சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?

சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.

சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.

அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.

மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.

No comments: